Pages

Monday, February 14, 2011

Naan paditha kavithaigal

கிராமத்து வீட்டின்
வாசல்படிகளில்
அமைதியாய் அமர்ந்திருக்கின்றன
கதைகள்.

படிகளில் அமர்ந்து
பேன் பார்க்கையில்
பாட்டி சொன்னவையாய் இருக்கலாம்.

சிறுகல் பொறுக்கி
பாறை விளையாடுகையில்
சகோதரி சொன்ன
கதைகளாகவும் இருக்கலாம்.

யாரேனும் வந்தமர்ந்தால்
சொல்லி விடும் துடிப்புடன்
எதிர்பார்ப்புகளின் ஏக்கத்தில்
காத்திருக்கின்றன அவை !

நகரத்தில் நடப்பட்டு
ஆண்டுக்கோ ஆவணிக்கோ
கிராமம் திரும்பும் பிள்ளைகளுக்கு
படிகளில் அமர்வது
கௌரவக் குறைச்சலாகி விட்டது.

அவர்கள் உதறிப் போட்ட
செருப்புகளுக்கு அடியில்
நசுங்கியே கிடக்கின்றன
நேசம் சுமந்த
கதைகளின் தொகுப்புகள்.